Saturday 10 October 2015

ஆயுர்வேதமும் சித்தமருத்துவமும் ஒன்றா, வேறு வேறா?

Dr.Jerome -FI

இதற்கு நேரடியாக ஒற்றை வரியில் பதில் சொல்லி முடித்து விடுகிறேன், கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதான்.
இந்தக் கட்டுரை இத்துடன் முடிந்தது.

மேலும் தகவலுக்கு மேற்கொண்டு படியுங்கள்.
ஆயுர்வேதமும் சித்தமருத்துவமும் ஒன்றா, வேறு வேறா என்பதைப் பற்றி விளக்குவதற்காக ஒரு கட்டுரை எழுதுவதற்கு எனக்கு விருப்பமில்லை என்றாலும், அநேகம் பேர் இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டேயிருப்பதால் இதை எழுதுகிறேன்.
இரண்டும் ஒன்றுதான் என்றால்,
ஏன் வேறுவேறு பெயர்கள்?
ஏன் வேறுவேறு படிப்புகள்?
ஏன் வேறுவேறு கல்லூரிகள்? (சித்த மருத்துவ படிப்பு- B.S.M.S(Bachelor of Siddha Medicine and Surgery
ஆயுர்வேத படிப்பு – B.A.M.S(Bachelor of Ayurvedha Medicine and Surgery)
இவை நியாயமான கேள்விகள்தான்.
ஆயுர்வேதத்திற்கும், சித்த மருத்துவத்திற்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே மொழிதான்.
சித்த மருத்துவத்தின் மூல நூல்கள் தமிழில் எழுதப்பட்டன. ஆயுர்வேதத்தின் மூல நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன.
aayurvedhavum siddhaavum1
சித்த மருத்துவம் தமிழர்களின் மருத்துவம், அதே மருத்துவத்தைத்தான் ஆயுர்வேதம் என்ற பெயரில் ஆரியர்கள் பழக்கப்படுத்திக் கொண்டனர்.
சித்த மருத்துவத்திலிருந்தே ஆயுர்வேதம் வந்தது எனவும், ஆயுர்வேதத்திலிருந்தே சித்த மருத்துவம் வந்தது எனவும் மாறிமாறி கூறிக் கொள்கின்றனர். இதனை வரலாற்றாசிரியர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

நான் இங்கே இதை எழுதுவதற்குக் காரணம், நோயாளிகளுக்கு ஒரு தெளிவு வரவேண்டும் என்பதற்காகத்தானே தவிர ஆயுர்வேதம், சித்தமருத்துவம் பற்றிய தொன்மங்களை ஆராய்வதற்கல்ல. வேண்டுமானால் இன்னும் சற்று விளக்கலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தின் முன்னோடிகள் என சரகர், சுஸ்ருதர், வாக்படர் ஆகியோரைக் கூறலாம். இதில் சரகரின் காலம் கிறிஸ்துவுக்குப் பிறகு 2 ஆம் நூற்றாண்டின்ஆரம்ப காலம். சுஸ்ருதர் காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டு.

சரி, குறைந்தபட்சம் இவர்களின் காலம் இது என தெரிகிறது.
சித்த மருத்துவம் இவர்களுக்கு முந்தியது என கூறவேண்டுமானால் சித்தர்களின் காலம் தெளிவாகத் தெரியவேண்டுமல்லவா.

அறுதியிட்டுக் கூறும்படியாக இன்னும் சித்தர்களின் காலம் கணிக்கப்படவில்லை.

இதை செய்யவேண்டியது மருத்துவர்களின் பணி அல்ல, தமிழ் வரலாற்றாசிரியர்கள் மற்றும் தமிழறிஞர்களின் பணி, தமிழ் பல்கலைக்கழகம், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தொல்லியல் துறை, மத்திய தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனம், உலக தமிழ் ஆராய்ச்சிநிறுவனம் போன்ற நிறுவனங்களும் ”தமிழ் தமிழ்” என்று பேசுவபவர்களும் தான் இதற்கு பொறுப்பு.

ஆரியர்கள் இங்கே வந்தபோது அவர்களுடன் எந்த மருத்துவமுறையையும் கொண்டுவரவில்லை எனவும், நான்கு வேதங்களான ரிக், யசூர், சாமம், அதர்வணம் எனும் வேதங்களில் கடைசி வேதமான அதர்வண வேதத்தின் ஒரு கிளையாகவே மருத்துவம் கூறப்பட்டது எனவும், அது அவர்கள் இங்கே வந்த பிறகு இங்கிருந்த தமிழர்களிடத்திருந்தே அந்த மருத்துவ அறிவைப் பெற்றனர் எனவும் கூறப்படுகிறது.

நோய் இயல் (Pathology):

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் இரண்டுமே வாதம், பித்தம், கபம் எனும் அடிப்படையிலேயே நோய்களை வகைப்படுத்துகின்றன.

நோய் கணிப்பு(Diagnosis):

இரண்டுமே நாடி அடிப்படையில் நோய்களை கணிக்கின்றன.

மருந்து இயல் (Pharmacology):

இரண்டிலும் ஒரே மாதிரியான மருந்துச் சரக்குகளே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மருந்து செய் இயலில் ஆயுர்வேதத்தைவிட சித்த மருத்துவம் சற்று முன்னேறியுள்ளது.
aayurvedhavum siddhaavum2உதாரணத்திற்கு தங்கபற்பம் என்ற ஒரு மருந்தை இங்கே குறிப்பிடுகிறேன். இது தங்கத்திலிருந்து செய்யப்படுவது. இதே மருந்தைதான் ஆயுர்வேதத்தில் சொர்ண பஸ்மா என்று அழைக்கின்றனர்.

புவியியல் வேறுபாடு:

வட இந்தியாவில் அநேக வற்றாத ஜீவநதிகள் உள்ளன. கங்கை சமவெளி எப்போதுமே பசுமையாக இருக்கும். எனவே எப்போதும் மூலிகைகள் தயாராகக் கிடைத்துவிடும்.
ஆனால் தமிழக நதிகள் பருவநிலையைப் பொறுத்தே நீரோட்டம் கொண்டிருக்கும். எனவேதான் சித்த மருத்துவத்தில் மூலிகைகளைத் தாண்டி தாதுப்பொருட்களையும்(Minerals), உலோகங்களையும்(Metals), காரசாரங்களையும்(Salts), பாஷாணங்களையும்(Arsenic Compounds), உபரசங்களையும் (Secondary Minerals) மருந்தாகப் பயன்படுத்தும் அடுத்த நிலைக்கு சென்றனர். எனவேதான் சித்த மருத்துவர்களை பாஷாண வைத்தியர்கள் என்றே அழைக்கின்ற முறையும் வந்தது.
aayurvedhavum siddhaavum3


ஆக ஆயுர்வேதத்திலிருந்து சித்த மருத்துவம் வந்ததா, சித்த மருத்துவத்திலிருந்து ஆயுர்வேதம் வந்ததா என்பதை வரலாற்றாசிரியர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

நோயாளிகள் சிகிச்சை இந்திய முறை மருத்துவம் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுக்கும்போது அவர்களுக்கு சித்தாமருத்துவம் வேறு ஆயுர்வேதம் வேறா அல்லது இரண்டும் ஒன்றா என்ற கேள்வி வருகிறது. அதற்கான பதிலை மட்டும் இங்கே தருகிறேன், சித்தமருத்துவம் ஆயுர்வேதம் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

ஆனால் அதே நேரத்தில் இந்த தட்பவெப்ப சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதே சிறந்தது என்ற அறிவுரையையும் நான் தர கடமைப்பட்டுள்ளேன்.

யோகா: ஓகம்

aasthumaa3யோகா எனும் உடற்பயிற்சி ஆயுர்வேதத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. ஆனால் யோகா எனும் வார்த்தையே ஓக அல்லது ஒரு வடிவத்தை ஒக்க (போல) உடலை இருக்க வைப்பது என்ற தமிழ் சொல்லிலிருந்து வந்தது என கூறுவாரும் உளர்.
மரத்தைப் போல (ஒக்க) நிற்றல்
பாம்பை ஒக்க(போல)நிற்றல் (புஜங்காசனம்)
வில்லை ஒக்க(போல) இருத்தல் (தனுராசனம்)
பிணத்தை போல (ஒக்க) கிடத்தல் (சவாசனம்)
என ஒரு உருவத்தை ஒக்க உடலை வைப்பதே ஒக்க நிலை அல்லது ஓக நிலை என்று கூறப்பட்டது.
ஓக நிலை என்ற தமிழ் வார்த்தையே ‘யோகா’என ஆயுர்வேதத்தில் மருவியதாக கூறப்படுகிறது. பெயர் வேறுபடலாம், ஆனால் செய்யப்படும் உடற்பயிற்சியோ ஒன்றுதான்.

சித்த மருத்துவத்தின் சிறப்பு:
சித்த மருத்துவம் ஆயுர்வேதத்தை விட சிறப்பானது என்பதற்கு “வர்மம்” எனும் சிறப்பு சிகிச்சையை கொண்டு விளக்கலாம். வர்மம் எனும் ஒருதனி துறை சித்த மருத்துவத்தில் உள்ளது. இவை போன்ற சில நுணுக்கமான மருத்துவ மேம்பாடுகளை கொண்டு இந்திய மருத்துவ முறைகளுக்குள்ளே சித்த மருத்துவம் சிறந்தது என கூறிக்கொள்ளலாம்.

மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

No comments:

Post a Comment