Wednesday 30 September 2015

சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா?

Dr.Jeromeசித்த மருத்துவத்தைப் பற்றிய ஒரு முழுமையான, அடிப்படையான புரிதலை தமிழ்கூறும் நல்லுலகிற்கு கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுபவையே இந்த தொடர் கட்டுரைகள். அந்த விதத்தில் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சையும் ஒரு துறைதான் என்பதை அறிமுகப்படுத்தவே இந்தக் கட்டுரை.
சித்த மருத்துவராகிய எனது பெயரின் பின்னால் இருக்கும் B.S.M.S என்று பட்டத்தின் விரிவாக்கம் எத்தனை பேருக்குத் தெரியுமோ? Bachelor of Siddha Medicine and Surgery அதாவது சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பட்டம்.
அப்படியானால் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா?
இதற்கான பதிலை கடைசியில் கூறுகிறேன்.
அதற்கு முன் சில விசயங்களைப் பார்ப்போம். அறுவை சிகிச்சை என்றாலே அதற்கு நேர்த்தியான கருவிகள் வேண்டும்.
சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் கருவிகளின் பெயர்களையும், அதன் வடிவங்களையும் சுருக்கமாகப் பார்ப்போமா?
‘அகத்தியர் நயன விதி’ என்ற புத்தகத்தில் மட்டும் கூறப்பட்ட 26 வகையான கருவிகளை ஒரு அறிமுகத்திற்காக குறிப்பிடுகிறேன்.
கத்தி சத்திரம் கவின்குறும்பி வாங்கியும்
முக்கவா தன்னுடன் முள்ளு வாங்கியும்
ஆழிக் கோலு மடுத்த பிறையுடன்
கத்திரிக் கையுடன் பரகரை வாங்கியும்
முச்சலா கையோடு முனிமொழி யோட்டும்
மட்டக் கோலும் மாறும் ஊசியும்
செப்புக் கிழையுஞ் சீரிய சலாகையும்
வட்டகை தன்னுடன் வளர்பஞ் சமுகமும்
செப்புச் சலாகையுங் கொம்புங் குடோரியும்
வெங்கலக் குழலும் ஈயச் சலாகையுங்
காயக் கோலுங் கண்கத்தி தண்டும்
இவையிவை யாயுத மிருபத் தாறும்
இதன் அளவுகளையும்,வடிவங்களையும் சுருக்கமாக பார்ப்போமா..
sidhdha - surgery6
  1. சுத்தி – 6 அங்குல நீளம்,அகலம் 1 அங்குலம்,முனைவட்டம் மயிர்க்கத்தியைப் போன்றது.
  2. சத்திரம் – 6 அங்குல நீளம்,வேப்பிலையைப் போல் பல்பல்லாயிருக்கும். நிறை 6 கழஞ்சு, பிளவை, கட்டியிவைகளைக் கண்டமாய் அறுக்க உபயோக்கபடுகிறது.
  3. குறும்பி வாங்கி – 7 அங்குலம், நிறை அரைக்கழஞ்சு, கைப்பிடி மட்டும் 5 அங்குலம்.
  4. முகவாதனன் – 12 அங்குலம், நிறை முக்காற் கழஞ்சு
  5. முள்வாங்கி – 6 அங்குலம் நீளமுள்ளதாய் 1 அங்குலம் அகலமுள்ளதாய் 1 கழஞ்சு நிறையுள்ளதாயிருப்பது. இது அறுக்கவும், கீறவும், நகம் வாங்கவும் உபயோகப்படுவது.
  6. ஆழிக்கோல் – 10 அங்குலம், நிறை அரைப்பலம்.
  7. பிறைக்கோல் – 3 அங்குலம், நிறை 3 கழஞ்சு எழுத்தாணிபோல் நீண்ட பிறைக்கோல் மத்தியில் விளங்கும்.
  8. கத்தரிக்கோல் – 8 ½ அங்குலம், நிறை கால் பலம்
  9. பரகூரை வாங்கி – 16 அங்குலம், நிறை அரைப்பலம்.
  10. முச்சிலாகை – 7 அங்குலம், நிறை 4 கழஞ்சு, மூன்று தகட்டு வாயுள்ளது.
  11. முனிமொழி – இது ஒரு முக்கிய கருவியாகும்.
  12. ஒட்டுக்கோல் – 11 அங்குலம் தலை மட்டம், 1 கழஞ்சு, தலையொழிந்த பாகம் அரைப்பலம் நிறையுள்ளது.
  13. அட்டக்கோல் – 18 அங்குலம் நிறை 8 காசெடை
  14. ஊசி – 3 அங்குலம், நிறை அரைமா.
  15. செப்புக் குழை – ஒரு சாண் நீளம், நிறை அரைப்பலம், தகடு ஓலைக்கனம், திரட்சியான குழல், புண்ணில் விடுவது.
  16. சுலாகை – 4 அல்லது 5 அங்குலம், நிறை 12 கழஞ்சு, புரையோடிய புண்களின் நிலையை யறிதற்கு உபயோகப்படுவது.
  17. வட்டகை – ஓர் ஆயுதம்
  18. பஞ்சமுகம் – ஓர் ஆயுதம்
  19. செப்புச் சிலாகை – ஓர் ஆயுதம்
  20. கொம்பு – 10 அங்குலம் நீளம்,காளை மாட்டுக் கொம்பிற்கு அடிப்பாகத்தில் பித்தளையினால் ஆன பூண் போன்றது. அதாவது வாழையின் குருத்துபோன்ற பூண் இரண்டங்குலம். குருதி கட்டப்பட்டிருக்கும் சரீர வீக்கம், கட்டி இவைகளைக் கீறி இரத்தத்தைக் கொம்பு வைத்து வாயினால் உறிஞ்சி உமிழ்தல்.
  21. குடோரி – 7 ½ அங்குலம், நிறை கால் பலம்.
  22. வெண்கலக் குழல் – 8 அங்குல நீளம், நிறைய — பலம்.
  23. ஈயச்சலாகை – 3 அங்குல நீளம், நிறை 4 கழஞ்சு, வாதம், பிளவை, கிருமி இவற்றைக் குணப்படுத்துவது.
  24. காயக்கோல் – 7 அங்குல நீளம், பருமன் 2 அங்குலம், நிறை 2 கழஞ்சு
  25. தண்டுச் சலாகை – 9 அங்குலம், நிறை 1 ½ கழஞ்சு, ஈர்க்குக் கனம்.
  26. நயனக் கத்தி – 3 அங்குலம், நிறை இரு பணவெடை, ஊசி போன்ற முனையுள்ளது. (முனையில் புளியிலை கனம் விட்டு மற்ற பாகங்களெல்லாம் நூலால் சுற்றப்பட்டுள்ளது.)
இங்கு இன்னொரு முக்கியமான விசயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், இந்த கருவிகளையெல்லாம் நான் பார்த்தது கூட கிடையாது.
சரி இனி அடுத்த விசயத்திற்கு வருவோம்.
சித்த மருத்துவத்தில் மூன்று வகையான மருத்துவமுறைகள் உள்ளன.
sidhdha - surgery1
  1. மூலிகைகள், தாதுப்பொருள்கள், உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சாதாரணமான மருந்துகளால் சிகிச்சை செய்வது.
  2. சில உயர்தர மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்வது (Higher Level Medicines)
  3. அறுவை சிகிச்சை
இதில் அறுவை சிகிச்சையை அசுர சிகிச்சை என்ற பெயரில் செய்திருக்கின்றனர்.
sidhdha - surgery2அதாவது மருந்துகளால் குணப்படுத்த முடியாத சில நோய் நிலைகளை, அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்த நோய்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோய்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே.
சரி, சித்த மருத்துவத்தில் எப்படி அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு வரலாம்.
  1. அறுவை
  2. அக்கினி
  3. காரம்
என்ற மூன்று முறைகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தனர். இந்த மூன்று முறைகளும் ஒரு அறுவை சிகிச்சையில் எப்படி பயன்படுத்தப்பட்டன என பார்ப்போம். முதலில் அறுவை, இதற்குத்தான் மேற்கூறிய கருவிகளை பயன்படுத்தினர்.
அறுவை சிகிச்சை செய்வதில் சிக்கலான விசயங்கள் மூன்று.
  1. அறுக்கும் போது ஏற்படும் வலி(pain)
  2. இரத்தப்போக்கு ((Bleeding)
  3. கிருமி தொற்று (Infection)
இந்த மூன்றையும் கையாண்டுவிட்டால் அறுவை சிகிச்சை செய்து விடலாம்.
  1. வலி:
sidhdha - surgery5இன்றைக்கு மயக்க மருந்து கொடுப்பதைப் போலவே நோயாளியை மயக்கமடையச் செய்ய அநேக மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஊமத்தை விதை, கஞ்சா, அபினி போன்றவைகள் உதாரணத்திற்கு. இன்றைக்கும் நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மிக வலிமையான வலி நிவாரணியான Morphine அபினி எனும் மூலிகையிலிருந்து தான் உருவாக்கப்பட்டது.
  1. இரத்தப்போக்கு:
sidhdha - surgery3இதனை தடுப்பதற்காகத்தான் அக்கினி என்ற முறையை பயன்படுத்தினர். அதாவது அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இரத்தக்குழாய்களில் மேற்கூறிய கருவிகளை சூடாக்கி சுட்டிகை செய்து விடுவது (Cauterization) இன்றைக்கும் நவீன அறுவை சிகிச்சையில் இந்த உத்திகள் பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.
  1. கிருமி தொற்று:
sidhdha - surgery4அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கிருமிகள் தொற்று ஏற்பட்டால் அதிகபட்சமாக உயிரிழப்பு கூட ஏற்படலாம். எனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கார மருந்துகளை வைக்கும் முறை இருந்தது. செய்யும் அறுவை சிகிச்சையைப் பொறுத்து காரமாகவோ, களிம்பாகவோ, பொடியாகவோ, நீர் வடிவிலோ, களி வடிவத்திலோ அல்லது பசை வடிவத்திலோ கார மருந்துகள் வைக்கப்பட்டன.
அறுவை சிகிச்சை முறைகளை விளக்கும் சில நூல்கள்:
தேரன் கரிசல்
தேரன் தரு
அகத்தியர் இரண வைத்தியம்
நாகமுனி நயன வைத்தியம்
சீவரட்சாமிர்தம்
யூகி சிந்தாமணி
என்னென்ன நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற விபரங்களும், யார் யாருக்கெல்லாம் அறுவை சிகிச்சை செய்தால் உடல்நிலை ஒத்துக்கொள்ளாது என்ற குறிப்புகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
மிக மிக சுருக்கமாக ஒரு அறிமுகத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.
சரி இப்போது மீண்டும் கேள்விக்கு வருவோம். சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா?
மருத்துவத்தில் உள்ளது, மருத்துவமனையில் இல்லை.
ஏன் இல்லை என்ற கேள்விக்கான பதில் “சித்த மருத்துவமனைகள் எங்கே இருக்கின்றன? நிலவிலா செவ்வாய் கிரகத்திலா?” என்ற எனது கட்டுரையைப் படித்தவர்களுக்குப் புரியும்.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

No comments:

Post a Comment