Wednesday 30 September 2015

மருத்துவம் என்றாலே அது செயற்கைதான்

Dr.Jerome
இப்போதெல்லாம் இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம், இயற்கை உணவு என்று பேசுவது வாடிக்கையாகிவிட்டது. என்ன புரிகிறதோ இல்லையோ இதைப்பற்றி பேசுவதும், கேட்பதும் சிலருக்கு ஒருவித மகிழ்ச்சியைத் தருகிறது.
இயற்கை என்றாலே ஏதோ இன்பமயமானது எனவும், செயற்கை என்றாலே ஏதோ கொடூர முகம் கொண்டது என்பது போலவும் ஒரு உருவகத்தை இவர்கள் மனதில் ஏற்படுத்திக் கொள்கின்றனர். அது அப்படியல்ல என்பதை விளக்கத்தான் இந்த கட்டுரை. ஒரு விளக்கத்திற்காக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன்.
ஒரு மரம் நிற்கிறது. – இது இயற்கை
வேகமாக காற்று வீசுகிறது – இது இயற்கை
அதனால் மரத்தின் ஒரு கிளை முறிந்து விடுகிறது – இது இயற்கை
இவை அனைத்தும் இயற்கைதானே. இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லையே.
அதைப் போலத்தான், பிறப்பு, இளமை, இன்பம், பிணி, மூப்பு, மரணம் இவை அனைத்தும் இயற்கைதானே. இவற்றில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லையே.
இவையெல்லாம் இயற்கை என்றால் இதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லையே. அப்படியிருக்க பிணி வந்தவுடன் ஏன் அதை எதிர்த்து மருத்துவம் செய்ய வேண்டும்? நோய் ஒன்றும் செயற்கை இல்லையே…
maruththuvam3
வரிசைப்படி பார்த்தால்:
  1. பிறப்பு
  2. இளமை
  3. இன்பம்
  4. பிணி(நோய்)
  5. மூப்பு (வயதாவது)
  6. சாக்காடு (மரணம்)
என்ற ஆறும் அனைவருக்கும் இயற்கையாக நிகழக் கூடியவைதானே.
ஏன் இந்த ஆறை குறிப்பிடுகிறேன் என்றால்,
“பேறு இளமை இன்பம் பிணிமூப்பு சாக்காடு
ஆறுங்கருவிலமைப்பு”
என்ற ஒரு தத்துவம் சித்த மருத்துவத்தில் உள்ளது. இயற்கையாக நிகழ்கின்ற இந்த படிநிலைகளில் மருத்துவத்திற்கு என்ன வேலை இருக்கிறது? பதில் கூறுங்கள் இயற்கை உணர்வாளர்களே.
ஆக ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நோய் என்பது இயற்கையானதுதான் அதை எதிர்ப்பதுதான் மருத்துவம். எதற்காக மருத்துவம் செய்கிறோம்?
சகமனிதனின் வேதனையை போக்க வேண்டும் என்கிற மனிதத்தின் அடிப்படையில்தான் நிறைய மருத்துவ அறிஞர்கள் முயன்றார்கள்.
ஒருவர் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இயற்கையா செயற்கையா என்று விவாதித்துக் கொண்டிருப்பதல்ல மருத்துவ அறிவு.
maruththuvam 2
ஆக மருத்துவமே செயற்கையானதுதான்.
மருத்துவம் என்றாலே செயற்கைதான் என்ற பிறகு, அதில் இயற்கை மருத்துவம் என்பதற்கு என்ன இருக்கிறது?.
இறுதியாக நான் என்னதான் கூறவருகிறேன் என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.
இயற்கை இயற்கை என பேசுபவர்கள் சில யதார்த்த புரிதல்களைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிடுவார்களோ என்ற பதற்றத்தில்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
மருத்துவத்தைப் பற்றி முழுமையாக தெரிந்தவர்களும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். மருத்துவத்தைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இன்று இந்த ‘இயற்கை’ பிரச்சனையே அரைவேக்காட்டு மனிதர்களால்தான் உருவாகிறது.
“Half Knowledge is dangerous” என்று ஒரு பழமொழி உண்டு.
இனி சித்த மருத்துவத்திற்கு வருவோம்.
maruththuvam1சித்த மருத்துவம் என்பது மூலிகை மருத்துவம் அல்ல என்ற என்னுடைய கட்டுரையை நீங்கள் வாசித்திருப்பீர்கள். மிகச் சிறிய ஒரு உதாரணத்தை இங்கே குறிப்பிடுகிறேன். மிகவும் இயற்கை என கருதப்படும் பாலையும், தேனையும் எடுத்துக்கொள்வோம். ஏன் இந்த இரண்டையும் குறிப்பிடுகிறேன் என்றால், இவை இரண்டும் சித்த மருத்துவத்தில் மருந்துகளுடன் சேர்த்து கொடுக்கப்படும் துணை மருந்துகளாக பயன்படுபவை. இதில் பால் என்பது பசுவின் மடியிலிருந்து கிடைப்பது. மனிதன் குடிப்பதற்காகவா இயற்கை பசுவின் மடியில் பாலை சுரக்கச் செய்கிறது?
ஒரு மிருகத்தின் மடியில் சுரக்கும் பால் அதன் குட்டிக்கு என்பதுதானே இயற்கை. அதன் குட்டி தன் வாயால் தாயின் மடியிலிருந்து உறிஞ்சி குடிப்பதுதானே இயற்கை.
அப்படி இருக்கும் போது ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தின் மடியிலிருந்து பாலை கையால் பிழிந்து தான் குடித்துவிடுவது எவ்வளவு தூரம் இயற்கையிலிருந்து விலகிய செயல். எவ்வளவு தூரம் செயற்கையான செயல்!!!
இது செயற்கை மட்டுமல்ல, இரக்கமற்ற செயலும் அல்லவா?
இயற்கை உணவு என பேசுபவர்களுக்கு இது புரியவில்லையா. சரி தேனை எடுத்துக்கொள்வோம். பால் கறப்பதை விட கொடூரமானது தேன் கூட்டைக் கலைத்து தேனைத் திருடிக்கொள்வது.
ஆக தத்துவார்த்த ரீதியாகவே பாலையும் தேனையும் பயன்படுத்துவது செயற்கையான வாழ்வியல் முறைதான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் செயற்கையாக பால் பவுடரை தயாரித்துவிட்டால் உடனே இயற்கை ஆர்வலர்கள் அது இயற்கைக்கு விரோதமானது என பேச ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் அடிப்படையில் எது இயற்கைக்கு விரோதமானது.
சித்த மருத்துவத்தில் மூலிகைகள் மட்டுமல்லாது உப்புகள் (Salts), உலோகங்கள் (Metals), தாதுக்கள் (Minerals) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை இயற்கையில் கிடப்பவைதான் ஆனால் சித்த மருத்துவ அறிவியல் இன்னும் ஒரு படி மேலே சென்று இந்த மருந்துச் சரக்குகளையே செயற்கையாக செய்யும் வேதியியல் முறைகளை கொண்டுள்ளது.
siththa maruththuvam2கேட்பதற்கு உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்.
-               போகர் ஏழாயிரம்
-               சட்டமுனி சரக்கு வைப்பு
-               பாண்ட வைப்பு
-               அகத்தியர் அமுத கலைஞானம்
போன்ற நூல்களில் செயற்கையாக இந்த சரக்குகளை செய்கின்ற வழிமுறைகள் உள்ளன.
இவ்வாறு செயற்கையாக இந்த மருந்துச் சரக்குகளை செய்கின்ற முறைக்கு “சரக்கு வைப்பு” என்று பெயர். ஆக மருத்துவத்தில் இயற்கை என்று ஒன்றும் கிடையாது. அதற்குள் மேலே சொல்ல வேண்டுமானால்,
siththa maruththuvam4மருத்துவம் என்பதே செயற்கையானதுதான்.
இயற்கை இயற்கை என கூறிக்கொண்டு மருத்துவத்தின் அடிப்படை புறிதலில் இருந்தே விலகிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த கட்டுரை.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

No comments:

Post a Comment